நான்கு வழி பாதை பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் - மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து முடங்கி கிடக்கும் நான்கு வழி சாலை பணிகளை விரைவில் துவங்க வேண்டுமென மனு அளித்தார்.;
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க புதுடெல்லி சென்றுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து முடங்கி கிடக்கும் நான்கு வழி சாலை பணிகளை விரைவில் துவங்க வேண்டுமென மனு அளித்தார்.
காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பணி முடங்கிய காரணத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் 2022 டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் விடப்பட்டது. 2023 ஜனவரி மாதம் 3ம் நாள் டெண்டர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது பின்னர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப்படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் நான்கு வழிச்சாலை பணிகள் மீண்டும் துவங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது. எனவே இதை கருத்தில் கொண்டு தங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக நான்கு வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.