திண்டிவனம்-மரக்காணம் இடையே நான்கு வழி சாலை பணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம் கோவில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு
திண்டிவனம்-மரக்காணம் இடையே நான்கு வழி சாலை பணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில் கோவில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.;
திண்டிவனம்,
திண்டிவனத்தில் இருந்து மரக்காணத்துக்கு 4 வழிசாலை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதற்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் திண்டிவனம் வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். இதில் ஒரு பகுதியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் போலீஸ் அதிகாரிகள் உள்பட பல அலுவலர்கள் மேற்பார்வையில் திண்டிவனத்தில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
கோவில் இடிக்கப்பட்டது
இதில் மன்னார் சாமி கோவில் அடுத்த இந்திரா நகர் வரை ஏராளமான கடைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் பெட்டிக்கடைகள் கிரைன் மூலம் தூக்கி சென்று அப்புறப்படுத்தப்பட்டது. அதேபோல் திண்டிவனம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலையும் பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர்.
முன்னதாக கோவில் இடிப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பிடல் தெரிவித்தனர்.