பார்முலா 4 கார் பந்தயம்: பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு
பாதுகாப்பு பணியின்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக காவல் உதவி ஆணையர் உயிரிழந்தார்.;
சென்னை,
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதற்காக மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக கடந்த 2 நாட்களாக, தீவுத்திடல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று மதியம் பார்முலா கார் பந்தயம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் தாமதமாகி, தற்போது கார் பந்தய போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.
கார்பந்தய பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட போலீசார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிவக்குமார் உயிரிழந்தார்.