திருப்பூரில் விவசாயிகள் பேரணி

திருப்பூரில் விவசாயிகள் பேரணி

Update: 2022-08-21 13:17 GMT

அனுப்பர்பாளையம்,

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடந்தது.

பரம்பிக்குளம்-ஆழியாறு

பரம்பிக்குளம்-ஆழியாறு தொகுப்பணைகள் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் பாசனப்பகுதிகள் கடுமையாக பாதிப்படையும் என்பதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தவிர ஆழியாறு மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீரும், தமிழகத்திற்கு 30.50 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும். ஆனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது. இதில் 3 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது.

பேரணி

இதனால் பி.ஏ.பி. திட்டத்தில் நீர்பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். காண்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டும். திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும். ஆணைமலையாறு, நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரம்பிக்குளம்-ஆழியாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை பேரணி நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த பேரணியை பரம்பிக்குளம் ஆழியாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் ஒருங்கிணைத்தார். இதில் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கரைபுதூர் நடராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்-பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் தொடங்கிய பேரணியில் விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுநல இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் பச்சை நிற துண்டு அணிந்தபடி கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. முடிவில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் கோரிக்கை நிறைவேறும் வரை 100 இளைஞர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், 1000 விவசாயிகளுடன் காத்திருப்பு போராட்டமும் நடத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்