காட்டுப்பன்றிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை

வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காட்டுப்பன்றிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-01-05 18:19 GMT

வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காட்டுப்பன்றிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வன விலங்கு பட்டியல்

உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனரும் திருப்பூர் மாவட்ட வன அலுவலருமான தேஜஸ்வி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், வனச்சரகர்கள் சிவக்குமார், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

காட்டுப்பன்றிகள்

'காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. நாய்கள் மூலம் அவற்றை விரட்ட அனுமதிக்க வேண்டும். வனவிலங்குப் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்கம் செய்து அவற்றைப் பிடிக்கவோ சுட்டுக்கொல்லவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கான நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அத்துடன் இழப்புக்கான முழுமையான தொகையும் கிடைப்பதில்லை. பயிருக்கு மட்டுமே இழப்பீடு கணக்கிடப்படுகிறது.

பாத்திகள், வேலிகள் சேதப்படுத்தப்படும் போது இழப்பீடு பெற முடியவில்லை. காட்டுப்பன்றிகளை வனத்திலிருந்து வெளியே வராமலிருப்பதற்கான நடவடிக்கை மற்றும் வனத்திற்கு வெளியே முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்துவது என 2 விதமான நடவடிக்கைகளை வனத்துறை முன்னெடுக்க வேண்டும். கட்டுப்பன்றிகளால் விவசாயத் தொழிலாளி காயமடைந்தால் அதற்கான மருத்துவ செலவினங்களை விவசாயிகளே செய்ய வேண்டிய நிலை உள்ளது. பன்றிகளைப் பிடிக்க சுமார் 2 ஆயிரம் செலவில் கூண்டு கண்டுபிடித்துள்ள விவசாயியின் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தக்கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. அண்டை மாநிலமான கேரளாவைப் போல காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல உத்தரவிட வேண்டும்.'

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

கமிட்டி

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி கூறியதாவது:-

'காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வு அவற்றைப் பிடித்து வனத்துக்குள் விடுவது அல்லது அவற்றை சுட்டுக் கொல்வது என்பதாகவே இருக்கிறது. நிரந்தர தீர்வு காண்பது குறித்து கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் அரசு முடிவெடுக்கும். அதேநேரத்தில் விவசாயிகள் இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக பயிர் சாகுபடிக்கு முன் வேலிப்பயிராக 3 அடுக்குகளில் ஆமணக்கு பயிரிடலாம். இது காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை 76 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுபோல் ரசாயன முறை மற்றும் இயற்கை முறைகளிலும் கட்டுப்படுத்த முடியும்'என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்