முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களில் விருப்பமுள்ளவர்கள் வேலை உறுதியளிப்பு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக சேரலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.;
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுப்பணி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய அரசால் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
எனவே முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களில், தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்பித்து பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் சேரலாம்
இதுதொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்புகொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்பட உள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால் இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.