அடித்து சித்ரவதை செய்வதாக முன்னாள் டி.ஜி.பி. திலகவதி மகன் மீது மனைவி போலீசில் புகார்
அடித்து சித்ரவதை செய்வதாக முன்னாள் டி.ஜி.பி. திலகவதியின் மகன் மீது அவரது மனைவி சேலம் மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.;
சேலம்,
சேலம் அழகாபுரம் பிருந்தாவன் ரோட்டில் வசித்து வருபவர் கண்ணுசாமி. இவருடைய மகள் சுருதி திலக் (வயது 40). இவருக்கும் தமிழக முன்னாள் டி.ஜி.பி.யான திலகவதியின் மகன் பிரபு திலக் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று சுருதி திலக், தனது தந்தை கண்ணுசாமியுடன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது கணவர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அப்போது சுருதி திலக் கூறியதாவது:-
வரதட்சணை கேட்டு மிரட்டல்
எனக்கும், முன்னாள் டி.ஜி.பி. திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக்கிற்கும் கடந்த 2007-ம் ஆண்டு சேலத்தில் திருமணம் நடந்தது. எனது திருமணத்தின் போது, 170 பவுன் நகைகளும், ரூ.1 கோடி ரொக்கமும் எனது தந்தை வழங்கி இருந்தார். எங்களுக்கு 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எனது கணவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மது அருந்திவிட்டு என்னை அடித்து சித்ரவதை செய்து வந்தார். வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இருப்பினும், குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். கணவரின் தாயார் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால் எப்போதும் என்னை மிரட்டி வந்ததோடு வாழ்க்கையை அழித்து விடுவோம் என்று கூறி வந்தனர்.
கொலை மிரட்டல்
மேலும் கணவருடன் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் நெருங்கி பழகி வந்ததால் இதுபற்றி நான் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலத்தில் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி மகன் மீது அவரது மனைவி மாநகர போலீசில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.