ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி அஞ்சலை கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-07-19 16:01 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி, பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக்கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கினர். பழிக்குப்பழி? பிரபல ரவுடியாக இருந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை கொலை நடந்த அன்றைய இரவே போலீசார் கைது செய்தனர். 11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது.

அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் 'என்கவுண்ட்டரில்' போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே மற்ற 10 கொலையாளிகளும், போலீஸ் காவல் முடிந்து, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பெண் வழக்கறிஞர் மலர்கொடி, மற்றொரு வழக்கறிஞர் ஹரிஹரன், ஏற்கனவே கைதான அருளின் உறவினர் சதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதற்கிடையில் வடசென்னை பா.ஜ.க. பெண் பிரமுகர் அஞ்சலையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலை தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலையில் அவருக்கு முக்கிய பங்கு இருந்ததாக போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அஞ்சலை தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்