யானை துரத்தியதில் தவறி விழுந்த வனத்துறையினர் 3 பேர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டியபோது பெண் யானை துரத்தியதால், தவறி விழுந்து வனத்துறையினர் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-12-23 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டியபோது பெண் யானை துரத்தியதால், தவறி விழுந்து வனத்துறையினர் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட யானைகள் கண்டகானப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர்.

3 பேர் படுகாயம்

அப்போது கூட்டத்தில் குட்டியுடன் சென்ற பெண் யானை ஒன்று திரும்பி வந்து வனத்துறையினரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர். அப்போது கீழே விழுந்து வனகாப்பாளர்கள் மகாவிஷ்ணு, பார்த்திபன், வேட்டை தடுப்பு காவலர் சூர்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து மற்ற வனத்துறை ஊழியர்கள் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். கண்டகானப்பள்ளி கிராம பகுதியில் யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்