கூண்டுக்குள் நாயை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி
கூண்டுக்குள் நாயை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி;
காங்கயம், மார்ச்.29-
ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க கூண்டில் நாயை வைத்து வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
சிறுத்தையை பிடிக்க தீவிரம்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகியவற்றை கொன்று வனப்பகுதிக்குள் கொண்டு தின்று வருகிறது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஊதியூர் வனப்பகுதியில் 20 கண்காணிப்பு கேமராக்கள், 2 கூண்டுகள் ஆகியவற்றை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தையின் உருவம் கேமராக்களில் பதிவாகவில்லை. கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை.
வனத்துறை ரோந்து
டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணித்தனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் தேடும் பணிகளை தீவிரப்படுத்தினர். அதைத்தொடர்ந்து 3 வனத்துறை ரோந்து வாகனங்கள் மூலம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பகல், இரவு நேரங்களில் சிறுத்தையை தேடி வருகின்றனர்.
மேலும் நள்ளிரவு நேரங்களில் சிறுத்தை குறித்த தகவல் ஏதேனும் பொதுமக்களிடம் கிடைக்க பெற்றால், உடனடியாக ரோந்து வாகனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை பிடிக்கும் முயற்சி எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
2 கூண்டுகள்,30 கேமராக்கள்
அதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி சத்தியமங்கலம், காரமடை ஆகிய பகுதிகளில் இருந்து மேலும் 2 கூண்டுகள் வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து 30 கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறுத்தை பிடிபடாமலும், கண்காணிப்பு கேமராக்களில் தென்படாமலும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் வனத்துறையினர் ஏற்கனவே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் 10 கேமராக்களை மாற்று பகுதிக்கு கொண்டு சென்று பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
நாயை கூண்டில் அடைத்து
இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறியதாவது:-
சிறுத்தையின் எச்சங்கள் ஓரிடத்தில் அதிக அளவில் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த இடத்திற்கு தினசரி சிறுத்தை வந்து செல்வது கண்டறியப்பட்டு, அந்த இடத்தில் கூண்டு வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் தண்ணீர் குட்டையில் வந்து சிறுத்தை தண்ணீர் குடித்து விட்டு போன கால் தடங்கள் பதிந்துள்ளது.
ஆதலால் தண்ணீர் உள்ள இடத்தில் ஒரு கூண்டு வைக்க முடிவு செய்துள்ளோம். அதில் நாயை பாதுகாப்பான முறையில் உள்ளே அடைத்து வைத்து பிடிக்க முயற்சிக்கிறோம். 3 அல்லது 4 நாட்களில் சிறுத்தை பிடிபட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
----