பட்டாசு தொழிற்சாலையில் வனத்துறையினர் சோதனை

சிறுமுகை அருகே பட்டாசு தொழிற்சாலையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடி தயாரிக்கப்படுகிறதா? என்று விசாரணை நடத்தினர்.

Update: 2023-09-13 21:30 GMT

மேட்டுப்பாளையம்

சிறுமுகை அருகே பட்டாசு தொழிற்சாலையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடி தயாரிக்கப்படுகிறதா? என்று விசாரணை நடத்தினர்.

அவுட்டுகாய்

கோவை வனக்கோட்டத்தில் காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து சில நேரங்களில் அட்டகாசம் செய்கின்றன. இதில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க சிலர் அவுட்டுகாய் என்ற நாட்டு வெடியை பயன்படுத்துகின்றனர். இதனால் காட்டுயானைளும் பாதிக்கப்படுகின்றன. சமீபத்தில் கூட நாட்டு வெடியால் காட்டுயானை ஒன்று உயிரிழந்தது.

இந்த நிலையில் சிறுமுகை அருகே பாசக்குட்டை பகுதியில் உள்ள நஞ்சப்பன் என்பவரது தொழிற்சாலையில் வனச்சரகர்கள் மனோஜ்(சிறுமுகை), சரவணன்(பெரியநாயக்கன்பாளையம்) ஆகியோர் தலைமையில் வனவர்கள் சுரேந்திரநாத், கோவிந்தசாமி, கல்யாணசுந்தரம், வனக்காப்பாளர்கள் வினோத், உமா சங்கர் மற்றும் வனத்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

எச்சரிக்கை

அப்போது நஞ்சப்பனிடம், அரசு அனுமதி பெற்று தொழிற்சாலை நடத்தப்படுகிறதா, வெடி மருந்து வாங்கும் இடங்கள் எவை, இருப்பு வைக்கப்பட்டு உள்ள பட்டாசுகள் எவ்வளவு, நாட்டு வெடி தயாரிக்கப்படுகிறதா என்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நாட்டு வெடி கேட்டு யாராவது வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், அதை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேர சோதனைக்கு பிறகு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்