மக்னா யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்...!
மக்னா யானையை இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.;
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி பகுதியில் மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. அந்த யானையை நேற்று முன்தினம் அதிகாலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே சின்னக்கல்லார் வனப்பகுதியில் விட்டனர்.
இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் பார்க்கவேதேஜா உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் சின்னக்கல்லார் பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து இரவு, பகலாக அந்த யானையை கண்காணித்து வருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ரேடியோ காலர் மூலமாகவும், 'டிரோன்' (ஆளில்லா குட்டி விமானம்) மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர்.
யானை தற்போது டேன்டீ தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டி சின்னக்கல்லார் ஆற்றின் கரையோரமாக உள்ள வனப்பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடாமல் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.