டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள் 4 மணி நேரம் ஆய்வு

தஞ்சையில், மது குடித்து 2 பேர் பலியான டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள் 4 மணி நேரம் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-05-23 22:38 GMT

தஞ்சாவூர், 

தஞ்சையில், மது குடித்து 2 பேர் பலியான டாஸ்மாக் பாரில் தடய அறிவியல் நிபுணர்கள் 4 மணி நேரம் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மது குடித்து 2 பேர் பலி

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மீன் வியாபாரியான குப்புசாமி(வயது 68), பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் விவேக்(36).இவர்கள் இருவரும் தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த 21-ந் தேதி மது குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.

மதுவில், சயனைடு

இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், சில உடல்பாகங்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் மது குடித்து இறந்த 2 பேரின் உடல்களில் சயனைடு கலந்து இருந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரும் சயனைடுவை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்தார்களா? அல்லது இவர்கள் இருவரையும் யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் 2 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், தாசில்தார்(கலால்) தங்க.பிரபாகரன் முன்னிலையில் மண்டல தடய அறிவியல் துறை துணை இயக்குனர் ஜெயா தலைமையில் உதவி இயக்குனர் காயத்ரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் மது குடித்து பலியான டாஸ்மாக் மதுபான பாரை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் குப்பைக்கூடையில் கிடந்த பேப்பர், பாலித்தீன் பை, கப்புகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.இதனைத்்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் கைரேகை நிபுணர்களும் டாஸ்மாக் மதுபான பாருக்கு வந்தனர். இவர்களும் தடய அறிவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு செய்தனர்.பின்னர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள மீன் மார்க்கெட்டிற்கு தடய அறிவியல் நிபுணர்களும், போலீசாரும் சென்றனர். அங்கு மது குடித்து பலியான குட்டி விவேக்கின் அண்ணன் வினோத் மீன் கடைக்கு சென்று அங்கிருந்த பெட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். மேலும் தங்களது செல்போன் மூலம் மீன் கடையையும், அங்கிருந்து டாஸ்மாக் கடையையும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த ஆய்வு 4 மணி நேரம் நடந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

மேலும் மீன்மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த சக மீன் வியாபாரிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தினார். அப்போது அவர், மதுகுடித்து இறந்த குட்டி விவேக், குப்புசாமி குறித்து கேட்டறிந்ததுடன் டாஸ்மாக் கடைக்கு செல்லும்போது மீன் கடையில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் எதுவும் எடுத்து சென்றார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

அதிர்ச்சி தகவல்

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, குட்டி விவேக்குக்கு வெளிநாட்டு சரக்கு எனக் கூறி நண்பர் ஒருவர் மதுபாட்டிலை கொடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமையில் அண்ணனுக்கு உதவி செய்வதற்காக குட்டி விவேக் மீன்கடைக்கு வருவது உண்டு. அப்படி இந்த வாரமும் மீன் கடைக்கு வந்த அவர், மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். பின்னர் குட்டி விவேக் தனது நண்பர் கொடுத்த மதுபாட்டிலை எடுத்துக்கொண்டு எதிரே இருந்த டாஸ்மாக் மதுபான பாருக்கு சென்று கொஞ்சம் குடித்துள்ளார். அவரது பின்னாலேயே குப்புசாமியும் சென்று விவேக் குடித்த மதுவை வாங்கி குடித்துள்ளார்.மீதமுள்ள மதுவை பாரில் இருந்த ஊழியர் ஒருவரிடம் கொடுத்து விட்டு 2 பேரும் டாஸ்மாக் மதுபான பாரை விட்டு வெளியேறிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வாந்தி எடுத்து மயங்கி உயிரிழந்துள்ளனர். குட்டி விவேக்குக்கு மதுபாட்டிலை வழங்கிய நண்பரையும், டாஸ்மாக் பார் ஊழியரையும் பிடித்து தனியாக விசாரித்து வருகிறோம். விரைவில் சயனைடு கலந்த மதுபாட்டில் யார் கொடுத்தது என்பது தெரிய வரும் என்றனர். போலீசார் கூறிய இந்த திடுக்கிடும் தகவல்கள் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து விசாரணை

எனினும் மதுபான பாரில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் போலீசாரால் இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. நகை தொழிலில் பயன்படுத்தப்படும் சயனைடு மூலம் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்ற சந்தேகம் போலீசாரிடையே நிலவுவதால், அதன் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்