வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகிறது

தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2023-08-24 14:47 GMT

தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

புதிய போலீஸ் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை டவுன் போலீஸ் உட்கோட்டத்தில் கிரிவலப்பாதையில் உள்ள ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் செங்கம் சாலை இணையும் பகுதியில் புதிய திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

வடக்கு மண்டல ஐ.ஜி. நா.கண்ணன் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலெக்டர் முருகேஷ், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதிய போலீஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் கிரிவலப்பாதையில் ரோந்து மோட்டார் சைக்கிள்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் நிலையத்தின் அருகில் மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள காவல்துறையை விட தமிழக காவல்துறையினர் வெகு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

முதல்-அமைச்சரின் கீழ் உள்ள காவல்துறையில் 1305 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 47 ரெயில்வே போலீஸ் நிலையங்கள், 227 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 220 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் என்ற அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 39 சட்டம்- ஒழுங்கு போலீஸ்நிலையங்கள், 7 மகளிர் போலீஸ் நிலையங்கள், ஒரு குற்றப்பிரிவு போலீஸ் நிலையம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், 4 மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை போலீஸ் நிலையங்கள் என 54 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

பொருளாதார வளர்ச்சி

ஆன்மிக பெருமக்கள் அதிகளவில் வந்து செல்லும் ஊர் திருவண்ணாமலை. குறிப்பாக கிரிவலப்பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர்.

சில சமயங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாலும், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சரிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஏற்கனவே கருணாநிதி ஆட்சி காலத்தில் கிழக்கு போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தற்போது மேற்கு போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 28 பேருடன் செயல்படும். இந்திய பொருளாதாரமும், மாநிலத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுவதால் தான் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எல்லாம் காவல்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினரின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் கட்டாயம் நிறைவேற்றுவார்.

நாட்டின் பெருமைக்குரிய ஒன்று

தென்னிந்தியாவில் இருந்து செயல்பட்டு வரும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவின் தென் துருவத்தில் உலகளவில் முதல் முறையாக சந்திரயான்-3 தடம் பதித்து இலக்கை அடைந்த விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும், தமிழக முதல்- அமைச்சரின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது நாட்டின் பெருமைக்குரிய ஒன்றாகும்.

மேலும் கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மாநில அளவில் சுற்றுச்சூழல் துறையால் அனுமதி வழங்கப்பட்டு, இந்திய அளவில் உள்ள விஞ்ஞானிகளின் குழுவால் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசின் அனுமதியோடு, முதல்- அமைச்சரின் ஒப்புதலோடு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்.

தமிழகத்தின் காவல்துறை தலைவராக இருந்த சைலேந்திரபாபுவை தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனுக்கு தலைவராக போடுவது காவல்துறைக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும்.

ஆனால் அவரை தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனுக்கு தலைவராக தமிழக அரசு பரிந்துரை செய்ததை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளார். இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம்

தி.மு.க.வை பொருத்தவரையில் உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம். உரிமை என்று வரும்போது குரல் கொடுக்கத் தான் செய்வோம். நீட் தேர்வு என்பது எங்களுடைய உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம்.

மாநிலத்தின் சுய ஆட்சிக்கு எந்த குந்தகம் ஏற்பட்டாலும் குரல் கொடுக்கத் தான் நாங்கள் இருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து அனைத்து கோப்புகளும் வரவில்லை என்று சொல்ல முடியாது. சில கோப்புகள் அனுமதி பெற்று வருகிறது. இல்லையென்று மொத்தமாக சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி. அம்பேத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், உதவி கலெக்டர் மந்தாகினி, தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பிரியாவிஜயரங்கன், அருணை வெங்கட், ஆறுமுகம் உள்பட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அரசு அலுவலர்கள், போலீசார், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்