கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. இதனை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பறவைகள் சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு ஆகும்.
மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.
247 வகையான பறவைகள்
இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது. இந்த ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த "ஹிமாலய கிரிபன் கழுகு" மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளது.
தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால் இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது. இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் ஆமூர் பால்கன் இனம், சைப்பிரியாவை கடந்து நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரும்.
அனைத்து வசதிகளும்
இங்கு ஓய்வு எடுக்கும் இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள் தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் 1 லட்சம் பறவைகளுக்கு மேல் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்திலேயே இதுவரை 1 லட்சத்திற்கு மேல் பறவைகள் வந்துள்ளன.
இதுகுறித்து கோடியக்கரை வனசரக்கர் அயூப்கான் கூறியதாவது:-
கோடியக்கரை பறவைகள் சரணலாயத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை சுற்றுலா பயணிகள் காணலாம். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாகுலார், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது என்றார்.