கட்டாய திருமணம் செய்து தனி குடித்தனம்: 17 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை; விருதுநகர் வாலிபர் கைது
சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தந்தையும், அவரது 28 வயது மகனும் மதுரையில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே அவர்கள் இருவரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 28 வயதான வாலிபர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார்.
அந்த வாலிபருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததால் அவர் போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து உள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு சிறுமிக்கு அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரியாக தாக்கினார்.
வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை
பின்னர் சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதுகுறித்து சிறுமி, போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு ெதாடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனே தல்லாகுளம் போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் தாக்கியதற்கான காயங்கள் இருந்தன.
பின்னர் போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது அவர் அண்ணாநகர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை கைது செய்தனர்.