கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு: சிறுமியை வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த வாலிபர் மீது வழக்கு
கட்டாய திருமணம் செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கட்டாய திருமணம் செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
பழ வியாபாரம்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் வெற்றிவேல் முருகன் என்ற வெற்றிச்செல்வன் (வயது28). குருநாதனும், அவரது மகனும் மதுரையில் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் 2 பேரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிவேல் முருகன் 17 வயது மதிக்கத்தக்க சிறுமியை திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு கஞ்சா மற்றும் மதுபழக்கம் உள்ளதால் அவர் போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து உள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரி தாக்கி உள்ளார்.
சித்ரவதை
பின்னர் சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பி விட்டார். கணவரின் சித்ரவதை தாங்காத சிறுமி அது குறித்து 100-க்கு போனில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெற்றிவேல் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன.
அதுகுறித்து போலீசார் விசாரித்த போது வெற்றிவேல் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தியதாகவும், போதையில் பாலியல் சித்ரவதை செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளாள்.
வழக்கு
பின்னர் போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிவேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.