சிப்பி அரிக்கும் தொழிலாளிகளுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டு

திருச்செந்தூர் கடலில் பக்தர் தவற விட்ட நகையை கண்டுபிடித்து கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளிகளுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2023-06-06 18:45 GMT

திருச்செந்தூர்:

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரா. கடந்த 3-ந் தேதி தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த அவர், கடலில் புனித நீராடியுள்ளார். அப்போது, இந்திரா கையில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க வளையல் கடலில் தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து அவர், கோவில் போலீசாரிடம் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக கடற்கரையில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் கடலில் தவறி விழுந்த வளையலை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிப்பி அரிக்கும் தொழிலாளிகளான மணிகண்டன், ஆறுமுகநயினார் ஆகியோர் வளையலை கண்டுபிடித்தனர். அந்த வளையலை அவர்கள் கோவில் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து லட்சுமிபுரத்தில் உள்ள இந்திராவுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர், திருச்செந்தூர் வந்து போலீசாரிடம் நகையை பெற்று கொண்டார். நகையை தேடி கண்டுபிடித்து கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்களான மணிகண்டன், ஆறுமுகநயினார் ஆகியோரை போலீசார் மற்றும் நகை உரிமையாளர் இந்திரா ஆகியோர் பாராட்டி, நன்றி தெரிவித்தனர். மேலும், அந்த 2 தொழிலாளிகளுக்கும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் பாராட்டி சால்வை அணிவித்து, பரிசு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்