ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதல் முறையாக குழந்தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதல் முறையாக குழந்தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தூத்துக்குடி,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு மத்திய அரசின் சார்பில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் 'சைட் மியூசியம்' அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குழந்தை மண்டைஓடு
இந்த நிலையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிறிய முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்தனர். 30 செ.மீ. அகலம், 58 செ.மீ. உயரம் கொண்ட அந்த முதுமக்கள் தாழியில், குழந்தையின் மண்டை ஓடு, கை எலும்புகள் இருந்தன.
மேலும் 4 வெண்கல வளையல்களும் இருந்தன. அவற்றில் இரு 4 அடுக்கு வெண்கல வளையல்களும் கிடைத்தன. அவற்றை அணியும் குழந்தை வளர்வதற்கு ஏற்ப வளையலும் தானாக விரிவடையும் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இவை 3.5 செ.மீ. விட்டமும், 0.2 செ.மீ. கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டதாக இருந்தன.
குழந்தைக்கான முதுமக்கள் தாழியில் சில ஈமச்சடங்கு பொருட்களும் இருந்தன. அதன் வாய்ப்பகுதியில் விரல் தடம் பதிந்து இருந்தது. வெண்கல வளையலானது உயர் வெள்ளீயம் கலந்து தயாரிக்கப்பட்டு இருந்தது. முதுமக்கள் தாழியில் வைக்கப்பட்டு இருந்த குழந்தைக்கு 5 முதல் 8 வயது வரையிலும் இருக்கலாம் என்றும், முதல் முறையாக குழந்தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
அருங்காட்சியகத்தில்...
இதேபோன்று மற்றொரு முதுமக்கள் தாழியை திறந்து ஆய்வு செய்தனர். அதில், வயது முதிர்ந்தவரின் மண்டை ஓடு, கை கால் எலும்புகள் இருந்தன. மேலும் குவளை, கிண்ணம், தட்டு போன்ற மண்பாண்ட பொருட்களும், 2 வெண்கல வளையல்களும் இருந்தன. வெண்கல வளையல் ஒவ்வொன்றும் 5.5 செ.மீ விட்டமும், 0.5 செ.மீ கன அளவும், 24 கிராம் எடையும் கொண்டதாக இருந்தன.
அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் விரைவில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.