3-வது முறையாக வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தொடர் வழிப்பறி, திருட்டு வழக்கில் 3-வது முறையாக வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
சேலம்,
வழிப்பறி
கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் முத்து (வயது 28). இவர், கடந்த செப்டம்பர் மாதம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் நடந்து சென்ற வெங்கடேஸ்வரன் என்பவரை வழிமறித்து மிரட்டி ரூ.3,100-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், அவர் கடந்த மே மாதம் காவேரி நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து வெள்ளிப்பொருட்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்றிருப்பதும், 2 இடங்களில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் முத்து ஈடுபட்டதால் அவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் முத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
3-வது முறையாக...
இந்த நிலையில், தொடர் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் முத்துவை 3-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு கன்னங்குறிச்சி போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார்.