தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு தரச்சான்றிதழ் பெறலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என விதைச்சான்று அதிகாரி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-08-29 12:02 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கு தரச்சான்று பெறலாம் என்று தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் சுரேஷ் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இயற்கை விளைபொருட்கள்

இயற்கை விளை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் அங்கக விளை பொருட்களுக்கான அங்காடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதற்கான தரச்சான்று என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் இன்றி விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தரச்சான்று

தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ் மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படுவதால் இந்த தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். தற்போது இயற்கை முறையில் வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் அல்லது உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையில் உரிய கட்டணம் செலுத்திபதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள உழவர் மையத்தில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவிஇயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களை https://www.tnocd.net/ என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்