ஆபாச படங்களை காண்பித்து மிரட்டியதால் விஷம் குடித்த பெண் போலீஸ்
ஆபாச படங்களை காண்பித்து மிரட்டியதால் பெண் போலீஸ் விஷம் குடித்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் போலீஸ்
திருச்சியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவருடைய உறவினர் லால்குடி திருமணமேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின்(வயது 40).
ரெயில்வே ஊழியரான இவர், திருவெறும்பூரில் உள்ள ரெயில்வே காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண் போலீசுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்டாலின் நெருங்கி பழகி வந்தார். அப்போது பெண் போலீஸ் மறுப்பு தெரிவித்தும், ஸ்டாலின் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆபாச புகைப்படம்
அத்துடன், பெண் போலீசை நிர்வாண நிலையில் ஆபாசமாக அவர் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி, பெண் போலீசுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததுடன், கடந்த 20-ந்தேதி அவரை மிரட்டி ரூ.20 ஆயிரமும் பறித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண் போலீஸ் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரெயில்வே ஊழியர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்டாலின் மீது, பெண்ணை மானபங்க படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
பின்னர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்டாலினை, வருகிற 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.