டயாலிசிஸ் பிரிவு கட்டுமான பணிக்கு இடம் தேர்வு பணியை ப.சிதம்பரம் ஆய்வு
டயாலிசிஸ் பிரிவு கட்டுமான பணிக்கு இடம் தேர்வு பணியை ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
சிங்கம்புணரி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சை முறை செய்து கொள்ள மதுரை, சிவகங்கை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற மருத்துவமனைகள் மட்டுமே டயாலிசிஸ் பிரிவு சிகிச்சைக்கான தனி கட்டிடம் உள்ளது. இந்நிலையில் சிங்கம்புணரி பகுதியில் அரசு பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு சிகிச்சை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் பொது நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ப.சிதம்பரம் தலைமையில் ஆய்வு பணி நடைபெற்றது. முன்னதாக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார். மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்த ப.சிதம்பரம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் இடம் குறித்து தலைமை மருத்துவர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலரும், சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவருமான தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.