மாநில கால்பந்து போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
திருச்சியில் 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்பந்து போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ள பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுக்கு தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கால்பந்து விளையாட்டிற்கான மாணவ, மாணவிகளுக்கு தேர்வு சென்னையில் நடைபெற இருந்தது மழையின் காரணமாக இந்த தேர்வு போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநில கால்பந்து விளையாட்டு தேர்வு போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) மாணவிகளுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாணவர்களுக்கும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
இதற்கான வயது வரம்பு 1-1-2004 அன்று அல்லது அதற்கு பின் பிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக இருத்தல் வேண்டும். இதில் பங்கேற்பவர்கள் ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட், பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் (குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அதாவது 2012 ஜனவரி 1-ந்தேதி அல்லது அதற்கு முன் மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப்பட்டது). எடுத்துவர வேண்டும்.
தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. தேர்வு போட்டிக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே மேற்கண்ட கால்பந்து விளையாட்டு தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்படி தேர்வு நடைபெறும் இடங்களில் குறிப்பிட்ட நாளில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.