திறந்தவெளியில் சுகாதாரமற்ற நிலையில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திறந்த வெளியில் சுகாதாரமற்ற நிலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
திருவண்ணாமலை புறவழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு என பல்வேறு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், புற நோயாளிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்களாவர். இந்த மருத்துவமனைக்கு வெளிப்புறத்தில் பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
சுகாதாரமற்ற உணவு விற்பனை
மருத்துவமனையில் பொதுமக்களுக்கான கேண்டின் செயல்பட்டு வந்தாலும் உள்நோயாளிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஏராளமானோர் மருத்துவமனைக்கு வெளியில் சாலையோரம் உள்ள கடைகளுக்கு சென்று தான் உணவு வாங்கி வருகின்றனர். கடைக்காரர்கள் உணவு பொருட்களை சாலையோரம் வைத்து கொண்டு திறந்த வெளியில் கூவி, கூவி உணவு விற்பனை செய்கின்றனர்.
பெரும்பாலான கடைகளில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு தரப்பு பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் உடல் நல குறைபாட்டினால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு இது போன்று தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதினால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பல்வேறு தரப்பு பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர்
மேலும் அங்குள்ள கடைகளில் உணவு பார்சல் கட்டுவதற்கு வாழை இலை பயன்படுத்தாமல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர்களையே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களும் அதிகளவில் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் வெளிப்பாடாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புறவழிச்சாலையோரம் உள்ள சுற்றுச்சுவரின் முன்பு பிளாஸ்டிக் கழிவுகளாகவே அதிகளவில் காணப்படுகிறது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இருண்டு கிடக்கும் ரெயில்வே தரை பாலம்
திருவண்ணாமலையில் வேங்கிக்கால் வழியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில்வே தரை பாலத்தின் வழியாக செல்கின்றனர். இந்த தரை பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் அங்கு மின் விளக்கு வசதி இன்னும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரத்திலும் இந்த ரெயில்வே தரை பாலம் இருண்டு காணப்படுகிறது.
இதன் வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தரை பாலத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் இருபுறம் சாலை அமைக்கப்படாமல் ஒரு புறம் அமைக்கப்பட்டு பல மாதங்களாக அந்த பணியும் கிடப்பில் கிடக்கின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.