குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள்
குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள் குறித்து தாய்மார்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;
நமது வீட்டில் சமைக்கின்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டுவந்த காலம் உண்டு. சாதம், இட்லி, தோசை மட்டுமே பிரதான உணவுகளாக இருந்தன. சோளம், உளுந்து, பயிறு, கடலை, அரிசி ஏதோ ஒன்றை வறுத்துத் தருவார்கள். மிஞ்சிப் போனால் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கடைகளில் வாங்கிச் சாப்பிடுவோம். அவை கலப்படம் இல்லாமலும், மண் சார்ந்த உணவுகளாகவும், சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் குறைவில்லாமல் இருந்தன. ஓட்டல்களுக்கு எப்போதோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் போவது உண்டு. இப்போது நிலைமை அப்படி அல்ல. ஓட்டல்களுக்கு போவது ஒரு நாகரிகமான, கவுரவமான நடைமுறையாகி விட்டது.
மாறிவரும் உணவுப்பழக்கம்
பெரும்பாலான வீடுகளில் சமையல் அறைகள் ஓட்டல்களுக்கு போய்விட்டன. வீடுகள் தங்கும் ஓட்டல்களாக மாறிவருகின்றன. இதனால் பல்வேறு ஒவ்வாமைகள், பிரச்சினைகள் உடல்ரீதியாக நாம் சந்திக்க நேர்கின்றன. குழந்தைகளும் இயற்கையான உணவை விட்டு செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சாகுழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள்களுக்கும் அடிமையாகி வருகிறார்கள். நாகரிம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக பாதங்கள் குறித்து குழந்தை மருத்துவர் மற்றும் தாய்மார்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
இதயத்தை பாதிக்கிறது
வயலப்பாடியை சேர்ந்த அனிதா:- நமது தமிழர்களின் உணவு முறை உடல் சார்ந்ததாக மட்டுமின்றி மனம் சார்ந்ததாகவும் அமைந்துள்ளது. வீட்டுப்பெண்கள் உணவு சமைக்கும்போது மனதை ஒருநிலைப்படுத்தி மகனுக்கு பிடித்தது, மகளுக்கு பிடித்தது, கணவருக்கு பிடித்தது, மாமிக்கு பிடித்தது, மாமனாருக்கு பிடித்தது என பார்த்துப்பார்த்து சமைப்போம், மேலும் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டுதான் சமைக்கிறோம். ஆகவே வீட்டு உணவு ஆரோக்கியத்தை அளிப்பதாக உள்ளது. ஓட்டல் உணவு சுவையாக இருந்தாலும் ஆரோக்கியத்தை தராது. ஓட்டல் உணவை அதிகமாக விரும்பி உண்பவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல நேரிடும். இதனைக்கருதி நமது குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வீட்டு உணவின் மகத்துவத்தை உணரவைத்து வளர்த்தோமானால் வருங்கால சமுதாயம் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
சில உணவுகள் பார்ப்பதற்கு கலராகவும் எண்ணெய் அதிகமாக பயன்படுத்தி செய்வதால் சுவையாகவும் உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு பிடிக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது, உணவில் அதிக எண்ணெய் சேர்க்கப்படுவதால் கொழுப்பு சக்தி இதயத்தை பாதிக்கிறது. சில உணவுகள் கெடாமல் இருக்க ஒரு வேதி பொருட்களை பயன்படுத்துவதால் உணவு கெடாமல் இருக்கிறது. அந்த உணவை குழந்தைகள் உண்ணும்போது குழந்தைகளுக்கு மயக்கம், வாந்தி வருவது உண்டு. எனவே இவ்வகையான உணவு நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கிறது. கடைகளில் விற்கப்படும் பொறித்த உணவுகள் மற்றும் பாக்கெட்களில் இருக்கும் உணவுகளை குழந்தைகள் சாப்பிடுவதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
முயற்சி செய்ய வேண்டும்
காரைக்குறிச்சியை சேர்ந்த மூதாட்டி கோகிலம்:- எங்கள் காலத்தில் எங்களுக்கு எங்கள் பெற்றோர்கள் எங்கள் வயலிலேயே உற்பத்தியான கம்பு, கேழ்வரகு, உளுந்து ஆகியவற்றில் வீட்டிலேயே செய்யப்பட்ட தின்பண்டங்களை வழங்குவார்கள். நாங்களும் எங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் எள்ளுருண்டை, நிலக்கடலை சுண்டல், கொண்டைக்கடலை, பயறு உள்ளிட்ட உடல் நலனை காக்கக்கூடிய சிறுதானியங்கள் மற்றும் தானியங்களை கொண்டு தின்பண்டங்கள் செய்து கொடுப்போம். தின்பண்டங்கள் மட்டுமல்லாமல் உணவு பழக்க வழக்கமே இப்போதைய தலைமுறையில் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் இல்லை. வீட்டில் தயாரிக்கப்படும் பொரியரிசி, நெல் அவள், பொரி உருண்டை போன்றவை இப்போதெல்லாம் எந்த வீட்டிலும் செய்யப்படுவதில்லை.
வீட்டில் 10 குழந்தைகள் இருந்தாலும் அத்தனை குழந்தைகளையும் தனித்தனியாக கவனிக்கும் மனப்பக்குவம் அன்றைய தாய்மார்களுக்கு இருந்தது. ஒரே ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதற்குள் அவர்களிடம் அவ்வளவு சலிப்பை காட்டும் மனப்பக்குவத்தோடு இப்போதைய தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்கள் அறிவாளியாக வளர வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொட்டி கல்விச்சாலைகளில் படிக்க வைக்கும் ஆர்வத்தில் சிறிய அளவிலாவது பிள்ளைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மேல் அக்கறை செலுத்தி பாரம்பரிய தின்பண்டங்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். விரைவு உணவு மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை உண்டு எதிர்கால தலைமுறையினரின் ஆயுளும், ஆரோக்கியமும் சுருங்கிக் கொண்டே இருக்கிறது. பழமை என்று ஒதுக்கியவற்றை மீண்டும் ஏற்றுக்கொண்டு நாகரீகம் என்று ஏற்றுக்கொண்டவற்றை தூக்கி எறியும் மனப்பக்குவம் மக்களுக்கு வர வேண்டும்.
மனநலம் ஆரோக்கியமாக இருக்கும்
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த குடும்ப நல மருத்துவர் ஜமுனா ரமேஷ்:- குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து கொண்ட உணவானது நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், வலிமை மற்றும் சகிப்பு தன்மையை அதிகரிக்கும். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் நூடுல்ஸ், பீட்சா உள்ளிட்ட உணவு வகைகளையும் மற்றும் சிப்ஸ், ஐஸ்கீரிம், சாக்லேட், கேக் உள்ளிட்ட தின்பண்டங்களையும், குளிர்பானங்கள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். இவையெல்லாம் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் ஆகும். இத்தகைய உணவு பொருட்கள் குழந்தைகளுக்கு பல் சொத்தை, குடல் புழுக்கள் மற்றும் உடல் பருமனை அதிகரிக்கின்றன. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை உருவாக்க ஊட்டச்சத்து மிக்க முட்டை ஒன்று தினமும் கொடுக்கலாம். அதிக புரத சத்து, தாது சத்து அடங்கிய பருப்பு வகைகளில் குழந்தைகளின் உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். வளர்ந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், மோர், வெண்ணெய் கொடுக்கலாம். அதில் தேவையான கால்சியம், வைட்டமின் ஊட்டச்சத்துகள் மிகுதியாக உள்ளது.
பழ வகைகளை சிறிய வயதில் இருந்தே குழந்தைகளுக்கு தின்பண்டங்களாக கொடுக்கலாம். அவற்றில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. நாள்தோறும் குழந்தைகளின் சாப்பிடும் உணவு வகைகளில் கீரை வகைகளில் ஏதாவது ஒன்று இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பேணுவதிலும், நார்ச்சத்து வைட்டமின்களின் புகழிடமாக உள்ளன. நட்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். நட்ஸ் மற்றும் விதைகள் முக்கியமானவை. பாதாம், வால்நட், பிஸ்தா, வேர்கடலை ஆகியவற்றில் வைட்டமின் ஏ, பி நிறைந்திருக்கின்றன. மேலும் எலும்பு, தசை வலுப்பெறுவதுடன் மனநலம் ஆரோக்கியமாக இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பாக்சில் தின்பண்டங்களுக்கு பதிலாக பழங்கள், நிலக்கடலையுடன் வெல்லம், கருப்பு திராட்சை, பேரீச்ச பழம் மற்றும் உலர் பழங்களை கொடுத்து அனுப்பலாம்.
நாம் அடிமையாகி வருகிறோம்
பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த வினோதினி:- நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு முறைகளை கடைபிடித்து வந்தனர். ஆதலால் மிக ஆரோக்கியமாகவும் திடமாகவும் வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் அந்நிய மோகம் தலை தூக்கி இருப்பதன் காரணமாகவும், பெருமையாகவும் கவுரவமாகவும் தன்னை காண்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அந்நிய உணவு வகைகளுக்கு நாம் அடிமையாகி வருகிறோம். அதுவே நமது உடலை சீர்குலைப்பதற்கு மிகப்பெரும் காரணமாக இருக்கிறது. முன்பெல்லாம் தெருக்கு தெரு உணவு தானியங்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கும். இயற்கை உணவுகள் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் தெருக்குத்தெரு மருத்துவமனைகள் தான் இருக்கிறது. அதற்கு காரணம் மாறிய கட்டுப்பாடு உணவு முறைகள் தான். ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்றால், நமது முன்னோர்கள் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த, நமது நிலத்தில் விளையும் ஆரோக்கியமான உணவு முறைகளை மட்டுமே உண்டு வாழ வேண்டும். அந்நிய நாட்டு உணவுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமது உடலுக்கு இல்லை. அது பல இடர்பாடுகளை நமது உடலுக்கு அளிக்கும். கம்மஞ்சோறு, கேழ்வரகு, களி, கடலை உருண்டை, திணை சாதம் போன்ற இயற்கை உணவு முறைகள் மட்டுமே, நமக்கும், நம் உடலுக்கும், நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் என்றும் சிறந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.