'பாஸ்ட்-புட்' கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ‘பாஸ்ட்-புட்’ கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.;

Update: 2023-09-22 18:45 GMT

அதிகாரிகள் சோதனை

நாமக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவர்மா துரித உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரோடு சேர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் உள்பட 18 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சவர்மா விற்பனை செய்யப்படும் 'பாஸ்ட்-புட்' கடைகள், ஓட்டல்கள், சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

70 கிலோ சவர்மா பறிமுதல்

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையிலான அலுவலர்கள் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கிய ஓட்டல் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து அவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 3 நாட்களில் சவர்மா பயன்படுத்தும் ஓட்டல்கள் என மாவட்டம் முழுவதம் 90 கடைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 15 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. சாப்பிட முடியாத வகையில் கெட்டுப்போய் இருந்த 70 கிலோ சவர்மா கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது. 8 ஓட்டல்களுக்கு அபராதமாக ரூ.30 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் இந்த சோதனை நடந்து வருகிறது. விதிகளை மீறும் ஓட்டல்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எச்சரிக்கை

மேலும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் கூறுகையில், சவர்மா தயாரிப்போர் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதாவது ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவரிடம் மட்டுமே சிக்கன் போன்ற மூலப்பொருட்களை வாங்க வேண்டும். சிக்கனை மசாலாவுடன் கலக்கும்போது கையுறை அணிந்திருக்க வேண்டும். சவர்மா தயார் செய்யும் பணியாளரும் மற்ற பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதற்கான மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும். சவர்மா அடுப்பு தூசிகள் படியுமாறு சாலை ஓரத்தில் இருக்கக்கூடாது. சவர்மாவை நன்கு வேக வைத்த பின்னர்தான் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். சவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வப்போது அடுப்பினை அணைத்து பயன்படுத்தக் கூடாது. அடுப்பில் வைத்து வெந்த 2 மணி நேரத்திற்குள் பரிமாற வேண்டும். அதுவரை அடுப்பு மிதமான வெப்பத்தில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். தினந்தோறும் மீதமான சவர்மாவை பரிமாறாமல் கழிவாக அகற்றிவிடவேண்டும். சவர்மாவை குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸில் வேக வைக்க வேண்டும். சமைப்பவர் கைகள் படாமல் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும். சவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்கியபடி இருக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்