ஈரோட்டில் ஆட்டுக்கறியுடன், மாட்டுக்கறியை கலந்து விற்பதாக புகார்: இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஈரோட்டில் ஆட்டுக்கறியுடன், மாட்டுக்கறியை கலந்து விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-09-11 18:20 GMT

ஈரோடு

ஈரோட்டில் ஆட்டுக்கறியுடன், மாட்டுக்கறியை கலந்து விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஏராளமான இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் அதிகாலையிலேயே கடைக்காரர்கள் இறைச்சிகளை தயார் செய்து வைக்கிறார்கள். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் வந்து கேட்கும்போது இறைச்சியை எடைபோட்டு வெட்டி கொடுக்கிறார்கள்.

இந்தநிலையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பனை செய்வதாகவும், ஆட்டு இறைச்சியில் மாட்டு இறைச்சியை கலந்து விற்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்கவிக்னேஷ் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வன், அருண்குமார், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

8 கிலோ இறைச்சி

கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள 15 இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு உள்ள இறைச்சிகளை அதிகாரிகள் எடுத்து பார்வையிட்டனர். அதில் கெட்டுப்போன இறைச்சிகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆட்டு இறைச்சிதான் விற்பனை செய்யப்படுகிறதா? மாட்டு இறைச்சி கலக்கப்படுகிறதா? என்றும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது மாட்டு இறைச்சி கலந்து விற்பனை செய்யப்படவில்லை என்று தெரியவந்தது.

4 இறைச்சி கடைகளில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்கனவே வெட்டப்பட்டு விற்பனைக்காக பதப்படுத்தி வைத்திருந்த மொத்தம் 8 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இறைச்சியை அவர்கள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும், இறைச்சியை அவ்வப்போது வெட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், பழைய இறைச்சியை பதப்படுத்தி வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்