பூக்கள் விலை கிடு,கிடு உயர்வு; மல்லிகைப்பூ கிலோ ரூ.800-க்கு விற்பனை

ஆடிப்பெருக்கையொட்டி பூக்கள் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-08-02 21:00 GMT

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். இதனால், கடந்த 2 வார காலமாக பூக்களின் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள். திருமணமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொள்வதும், இளம்பெண்கள் நதிக்கரையில் வழிபாடு நடத்துவதும் வழக்கம்.

இதற்கிடையே ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி தேனி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையான மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ சாதிப்பூ ரூ.500, முல்லைப்பூ ரூ.500, சம்பங்கி ரூ.300, செண்டுமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.250, ரோஜா ரூ.100, துளசி ரூ.30, மருகு ரூ.70 என விற்பனை செய்யப்பட்டது.

நாளை ஆடி 3-வது வெள்ளிக்கிழமை, நாளை மறுநாள் குச்சனூர் சனீஸ்வரர் கோவில் 3-வது வார ஆடித்திருவிழா என அடுத்தடுத்து வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக இருப்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்