அறுவடைக்காக காத்திருக்கும் பூக்கள்
ஆயுத பூஜை விழாவையொட்டி கல்லல் அருகே பயிரிடப்பட்ட பூக்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்தாண்டு அதிக விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.;
காரைக்குடி,
ஆயுத பூஜை விழாவையொட்டி கல்லல் அருகே பயிரிடப்பட்ட பூக்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்தாண்டு அதிக விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அறுவடைக்கு தயாரான பூக்கள்
ஆண்டுதோறும் வரும் நவராத்திரி விழாவின்போது பூக்கள் தேவை அதிகமாக இருக்கும். இதேபோல் ஆயுதபூஜை அன்றும் பூக்கள் தேவை அதிகமாக உள்ளதால் அன்றைய தினம் பூக்கள் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதையொட்டி ஆண்டுதோறும் கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கிணற்று பாசனத்தை பயன்படுத்தி பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்களை அதிகளவில் பயிரிட்டு அதை அறுவடை செய்து பூ மார்க்கெட் பகுதிக்கு அனுப்புவது வழக்கம்.
இந்தாண்டு வருகிற 4-ந் தேதி ஆயுத பூஜை விழா வர உள்ளதையடுத்து மாவட்டத்தில் கல்லல், சிவகங்கை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேந்தி பூக்கள், சேவல் பூக்கள், மல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயரிட்டுள்ளனர். கல்லல் அருகே சிலந்தக்குடி, நாட்டரசன்கோட்டை சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஆகிய பகுதியில் ஆயுத பூஜைக்காக அதிகளவில் கேந்தி பூக்களை விவசாயிகள் கிணற்று பாசனத்தில் பயிரிட்டுள்ளனர். இந்த பூக்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
விலை உயர வாய்ப்பு
இதுகுறித்து கல்லல் பகுதி விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் வரும் ஆயுத பூஜை விழா, பொங்கல் விழா, முகூர்த்த நாட்களில் அதிகளவில் பூக்கள் தேவை இருக்கும். அத்தகைய காலக்கட்டத்தில் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகும். கடந்த 2 ஆண்டுகளாக பூக்களின் தட்டுப்பாடு அதிகளவில் இருந்ததால் கடந்த ஆயுதபூஜையின் போது கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் இந்தாண்டும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தற்போது அதிகளவில் கேந்தி பூக்கள் பயிரிட்டுள்ளோம். ஆயுத பூஜையின் போது கேந்தி பூக்கள் தேவை அதிகமாக இருக்கும். எனவே அதிகளவில் இந்த பூக்களை பயிரிட்டு தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. பூக்களை அறுவடை செய்து காரைக்குடி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதியில் உள்ள பூ மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.