நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-13 12:06 GMT

பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட காமேஸ்வரி நகர், ஓம் சக்தி நகர், பரமேஸ்வரி நகர், உஷா நகர் போன்ற பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது அந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஓம் சக்தி நகரில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

மழைநீரை வெளியேற்றும் பணி

மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் செல்லும் மீன்களை பிடித்து விளையாடுகின்றனர். இந்தநிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலை ஓரமாக கால்வாய் தோண்டி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் மழை நீர் சுமார் 2 அடி அளவுக்கு சாலைகளில் தேங்கி பல நாட்கள் நிற்பதால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம், இனி வரும் காலங்களில் இந்த பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்