தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.

Update: 2023-12-17 19:32 GMT

நெல்லை,

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. பகல் 12 மணி அளவில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மிக கன மழை பெய்தது. மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி பகுதிகளில் தலா 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவி வழியாக அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணிமுத்தாறு அருவி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மூழ்கியவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27,848 கனஅடி, இரவு 11.30 மணி நேரப்படி 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.

 

பாபநாசம், சேர்வலாறு

இதேபோல் பாபநாசம் அணை மற்றும் இதனுடன் இணைந்த சேர்வலாறு அணைகளுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து உள்ளது. நேற்று காலையில் 125.20 அடியாக இருந்த நீர்மட்டம் (உச்சநீர்மட்டம் 143 அடி) மாலையில் 135 அடியாக உயர்ந்தது.

இதையொட்டி அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 136 அடியாக (உச்சநீர்மட்டம் 156 அடி) இருந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 150 அடியை தொட்டது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காட்டாறு வழியாக வரக்கூடிய வெள்ளநீர் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது. இந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணையை கடந்து அகஸ்தியர் அருவியை மூழ்கடித்தபடி பரந்து விரிந்து பாய்ந்து ஓடுகிறது. மேலும் கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பி உபரி நீரும் வெளியேறுவதால் அந்த தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது. கோபுரம் மட்டுமே வெளியே தெரிகிறது. இதுதவிர நெல்லை மாநகரம் மற்றும் கிராம பகுதியில் பெய்யும் மழை நீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

இதையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் அருகில் செல்லக்கூடாது, நீராடவோ கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகளுக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்தும், விபத்துகள் குறித்தும் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களையும் அறிவித்து உள்ளனர்.

 

குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நேற்று தொடர் மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்