விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பியதை அடுத்து, அணைகளில் இருந்து உபரிநீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றில் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
இதனால் எல்லீஸ்சத்திரம், தளவானூர் பகுதியில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் ஓடுவதால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் ஆற்றுப்பகுதிகளில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் செல்வதை தடுக்கவும், குளிப்பதை தடுக்கும் வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தரைப்பாலம் மூழ்கியது
இதேபோல் தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் அருகே திருப்பாச் சனூர், சேர்ந்தனூர், எஸ்.மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள மலட்டாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கினால் எஸ்.மேட்டுப்பாளையத்தில் இருந்து பரசுரெட்டிப்பாளையத்திற்கு இடையே செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.
குறிப்பாக பரசுரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைக்காக பண்ருட்டி, ராம்பாக்கத்திற்கு எளிதில் செல்ல முடியாமல் ராசம்பேட்டை வழியாக 3 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். அதுபோல் பரசுரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ராம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிற நிலையில் அவர்களும் 3 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு ராசம்பேட்டை வழியாக ராம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றும் மழை...
நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம், கூட்டேரிப்பட்டு உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்றும் இந்த மழை நீடித்தது. காலை 7 மணியில் இருந்து மாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது.
இந்த மழையினால் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் குடைபிடித்தபடி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பூஜை பொருட்களை வாங்கிச்சென்றனர்.