கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது. அந்த தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது.
6 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது
இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடல் போல ஆறு காட்சி அளிக்கிறது. இந்த நீரானது, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு, பாலூரான்படுகை, வாடி ஆகிய 6 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த கிராமங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.