பரமத்திவேலூர் காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பயணிகள், மீன்பிடி பரிசல்கள் இயக்க தடை
பரமத்திவேலூர் காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பயணிகள், மீன்பிடி பரிசல்கள் இயக்க தடை
பரமத்திவேலூர்:
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.95 லட்சம் கனஅடியும், பவானியில் இருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு வினாடிக்கு 2 லட்சத்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே பரமத்திவேலூர் வட்டத்திற்குட்பட்ட காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையம், குரும்பலமகாதேவி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம் படுகையணை, ஜேடர்பாளையம் பரிசல் துறை, கண்டிப்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கு.அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவோ கூடாது எனவும், பயணிகள் பரிசல் இயக்கவும், மீன்பிடித்தல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை உள்ளிட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்கள் மூலமும் பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.