கனமழையால் பாலம் உடைந்தது
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் உடைந்தது
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் உசிலம்பட்டியை சுற்றியுள்ள தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கனூர், செல்லம்பட்டி, எழுமலை, சேடபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக பல்வேறு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சூழலில் வி.பெருமாள்பட்டி அருகே ஒத்தப்பட்டி ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் அடித்துச்செல்லப்பட்ட சூழலில் வி.பெருமாள்பட்டி, மூப்பப்பட்டி, புதுநகர் உள்ளிட்ட 3 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விநாயகர் சதுர்த்திக்கு கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து துண்டிப்பு காரணமாக அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வ ராமன் ஆகியோர் மழையினால் சேதமடைந்த பாலத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.