17 வயது மாணவரை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: இளம்பெண் மீது போக்சோ வழக்கு
மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அந்த இளம்பெண் தனது வீட்டுக்கு மாணவரை அடிக்கடி வரவழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவரிடம் கூறினார். அதற்கு மாணவர் சம்மதிக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாணவர் பயிலும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவரை இடைநீக்கம் செய்தனர்.
இதனை அறிந்த மாணவரின் தாயார், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.