கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் 30 பேர் சிக்கி தவிப்பு :வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 30 பேரை வனத்துறையினர் மீட்டனர்.

Update: 2023-03-26 18:45 GMT

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. பெரியகுளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் இந்த அருவியை சென்றடையலாம்.

தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொடைக்கானல், வட்டக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கும்பக்கரை அருவியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வாரவிடுமுறையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் நேற்று குளிக்க வந்தனர். வெள்ளியை வார்த்து ஊற்றியது போல் அருவியில் ஆர்ப்பரித்த தண்ணரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இந்த மழையால் அருவிக்கு நீர்வரத்து கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்தது. சிறிது நேரத்தில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது 80-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

30 பேர் பத்திரமாக மீட்பு

இதற்கிடையே அருவியில் திடீரென வெள்ளம் மேலும் அதிகரித்தது. இதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 30 பேர், அருவியின் வடக்கு பகுதிக்கு சென்று விட்டனர். மற்றவர்களை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் அருவியின் மற்றொரு பகுதியில் தவித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பாலம் வழியாக வெளியே வருமாறு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

அதன்படி அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் அருவி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்