தூத்துக்குடியில் மீனவ பெண்களுக்கு செவுள்வலைவடிவமைத்தல் பயிற்சி
தூத்துக்குடியில் மீனவ பெண்களுக்கு செவுள்வலை வடிவமைத்தல் பயிற்சி தொடங்கியது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் 'மீனவப் பெண்களுக்கு செவுள் வலை வடிவமைத்தல், பின்னுதல் மற்றும் வலைசீர் செய்தல் பற்றிய ஒருவார கால பயிற்சி தொடங்கியது. பயிற்சி தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் ப.அகிலன் தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியர் த.ரவிக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மண்டல இணை இயக்குநர் அமல் சேவியர் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். கல்லூரியின் மீன்பிடித் தொழில்நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை தலைவர் நீதிச்செல்வன் பயிற்சி விளக்கவுரை நிகழ்த்தினார். மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜய நிர்மலா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியின் போது செவுள் வலைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு முடிச்சுகள், வளைவுகள், கயிறு இணைத்தல் முறை, வலைகளை வடிவமைத்தல், மடங்கு பின்னுதல், வலைவெட்டி சீர்செய்யும் முறைகள், வலைகளை இணைக்கும் முறைகள் மற்றும் மாதிரி செவுள் வலை வடிவமைத்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் பழையகாயல் கிராமத்தை சேர்ந்த 30 மீனவப் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முடிவில் மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் அ.அந்தோணி மிக்கேல் பிரகாகர் நன்றி கூறினார். முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் சே.அர்ச்சனா, ஜே.அமலா சஜீவா, த.சுந்தரேஸ்வரி, இ.தினேஸ் குமார், மு.வீரமணி மற்றும் சூ.ஏமிமா ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.