கல்லணைக்கால்வாயில் குழாய் மீது அமர்ந்து ஆபத்தை உணராமல் மீன்பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தஞ்சை கல்லணைக்கால்வாயில் குழாய் மீது அமர்ந்து ஆபத்தை உணராமல் மீன்பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-12-16 19:00 GMT

தஞ்சை கல்லணைக்கால்வாயில் குழாய் மீது அமர்ந்து ஆபத்தை உணராமல் மீன்பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லணைக்கால்வாய்

தஞ்சை மாவட்டம் காவிரி ஆறு பாயும் மாவட்டம் ஆகும். இந்த காவிரி ஆற்றில் இருந்து வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய் எனும் புது ஆறு, குடமுருட்டி, அரசலாறு, பாமனியாறு, கண்ணனாறு, வீரசோழனாறு என 36-க்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன. இதில் கல்லணைக்கால்வாய் கல்லணையில் இருந்து பிரிந்து புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2½ லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லணையில் இருந்து கல்லணைக்கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு குறைக்கப்படும். இதன்காரணமாக கல்லணைக்கால்வாயில் குறைந்த அளவே தண்ணீர் செல்லும்.

மீனுக்கு தூண்டில்

இதனை பயன்படுத்தி பலர் கல்லணைக்கால்வாயில் மீன் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலாளர்கள் பெரும்பாலும் கல்லணைக்கால்வாய்க்குள் இறங்கி வலை வீசியும், கரையோரங்களில் வலைகளை கட்டியும் மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக பொழுது போக்குக்காக மீன்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு பொழுது போக்குக்காக மீன்பிடிப்பவர்கள், கால்வாயின் குறுக்கே செல்லும் குழாய்களின் மீது அமர்ந்து ஆபத்தான முறையில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கிறார்கள்.

ஆபத்தை உணராமல் இவ்வாறு மீன்பிடிப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கூட்டம், கூட்டமாக இவ்வாறு குழாய் மீது அமர்ந்து தூண்டில் போடுகின்றனர். குறிப்பாக தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலை கல்லணைக்கால்வாய் பாலத்தின் தூண்களின் நின்று மீன்பிடிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

தூண்டில் போடுபவர்கள் குழாயின் மீது ஏறி நடந்து செல்வது, தூண்கள் வழியே கல்லணைக்கால்வாய்க்குள் இறங்கி விளையாடுகின்றனர். இவற்றை பார்க்கும் சிறுவர்களும் விடுமுறை நாட்களில் அங்கு சென்று தூண்டில் போடுகின்றனர். இதனை பார்த்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ஆபத்தை உணராமல் தூண்டில் போட்டு மீன்பிடிப்பதை தடுக்கவும், அந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்