நெய்வேலி ஏரியில் மீன்பிடித் திருவிழா

நெய்வேலி ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.;

Update: 2022-06-15 19:17 GMT

வாத்தலை அருகே நெய்வேலி கிராமத்தில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்தானது கொல்லிமலையில் இருந்து அய்யாற்று வழியாக வரும் மழைநீர் ஒன்றே ஆகும். இவ்வாறு கிடைக்கப்பெறும் தண்ணீர் மூலம் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது. ஏரியில் தண்ணீர் வற்றும் காலங்களில் சுற்றுவட்டாரங்களில் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றுகூடி இந்த ஏரியில் மீன்பிடி திருவிழாவில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அய்யாற்றில் நீர்வரத்து இல்லாததால் விவசாயம் செழிக்காமலும், மீன்பிடி திருவிழா நடைபெறாமலும் மக்கள் சிறிது மன வேதனையில் இருந்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழை நன்கு பொழிந்ததால் கொல்லிமலையில் இருந்து அய்யாற்று வழியாக வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் நெய்வேலி ஏரியில் வந்து நிரம்பி வழிந்தது. இந்நிலையில் ஏரியில் தண்ணீர் வற்றவே நேற்று சுற்றுவட்டார கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவை நடத்திக் கொண்டாடினர். 10 ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் நெய்வேலி, கோமங்கலம், சித்தாம்பூர், தின்னகோணம், பொன்னாங்கண்ணிபட்டி, தண்டலைபுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி சாதி ,மத பேதமின்றி ஏரியில் இறங்கி தண்ணீரில் வலைபோட்டு விரால்மீன், கெண்டை மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு கமகமத்தது.

Tags:    

மேலும் செய்திகள்