புதூர் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா

அன்னவாசல் அருகே புதூர் பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கெழுத்தி, அயிரை, கட்லா மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர்.;

Update: 2023-04-01 18:30 GMT

மீன்பிடி திருவிழா

அன்னவாசல் அருகே உள்ள புதூர் பெரிய குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் இந்த குளம் நிரம்பியது. மேலும் அந்த குளத்தில் மீன்களும் அதிகளவில் இருந்தன. இதையடுத்து, குளத்தில் தண்ணீர் வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதையொட்டி ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசியவுடன், குளத்துக்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் தாங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலையை வீசி மீன் பிடித்தனர்.

மீன் குழம்பு வாசனை

இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையையும், சாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச்சியாகும். இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர்.

பின்னர் இந்த மீன்களை பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் அனைத்து வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

Tags:    

மேலும் செய்திகள்