மீன்களுக்கு இருக்கும் மதிப்பு மீனவர்களுக்கு இல்லை சீமான் வேதனை

Update: 2022-08-20 18:14 GMT

புதுக்கடை, 

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மீன்களுக்கு இருக்கும் மதிப்பு மீனவர்களுக்கு இல்லை என தெரிவித்தார்.

துறைமுகத்தை பார்வையிட்டார்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அடிக்கடி விபத்தில் சிக்கி மீனவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். எனவே, துறைமுக மறுசீரமைப்பு பணிைய உடனே தொடங்கி முடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிடுவதற்காக நேற்று மாலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அவர் துறைமுக பகுதிகள் அனைத்தையும் சுற்றி பார்த்தார்.

பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உயிர் இழப்புகள்

மீனவ மக்கள் பாதுகாப்பாக மீன்பிடிப்பதற்கு தேங்காப்பட்டணம் துறைமுகம் உருவாக்கப்பட்டது. ஆனால் பூகோள அமைப்பை ஆராயாமல் தவறான முறைப்படி இந்த துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

சாதாரணமாக மீன்பிடித் துறைமுகங்களுக்கு முகத்துவாரத்தின் அகலம் குறைந்தபட்சம் 300 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால் இந்த துறைமுகத்தில் 80 மீட்டர் அகலத்தில் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

சிறந்த வரைபடம்

இங்குள்ள மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்திற்காக சிறந்த வரைபடம் தயாரித்து வைத்துள்ளனர். அதன்படி மீனவர்களின் ஆலோசனைபடி துறைமுகம் கட்டி இருந்தால் இந்த அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. துறைமுகத்தின் தவறான கட்டுமானத்தால் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநில அரசு துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

விவசாய நிலத்தை அழித்து விவசாயத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற அரசுகள் தற்போது மீனவ சமுதாயத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது. இந்த நிலை நீடித்தால் மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே. ஒகி புயலில் இறந்தவர்களை கூட மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மீனவர் களுக்கு இல்லை.

கற்கள் கடத்தல்

நமது இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கேரள துறைமுகங்களுக்கு அனுப்புகின்றனர். இதுவரை சுமார் 80 லட்சம் டன் கற்கள் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் தனது 6 மாத கை குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து குழந்தைக்கு 'அலைமகள்' என்று சீமான் பெயர் சூட்டினார். சீமான் வருகையையொட்டி குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்