வைகை அணை பகுதியில் நடைபெற்ற மீனவர்கள் போராட்டம் வாபஸ்

வைகை அணை பகுதியில் ஒருவாரமாக நடத்தி வந்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றனர்.;

Update: 2023-04-25 20:45 GMT

வைகை அணை பகுதியில் ஒருவாரமாக நடத்தி வந்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றனர்.

மீன்வர்கள் போராட்டம்

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. வைகை அணையை சுற்றியுள்ள சுமார் 18 கிராமங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அணை பயன்பாட்டிற்கு வந்த கடந்த 65 ஆண்டுகளாக மீன்பிடியை அரசே நடத்தி வந்தது. பிடிபடும் மீன்களில் சரிபாதி அரசுக்கும், மறுபாதி மீனவர்களுக்கும் என்ற பங்கு அடிப்படையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஒருமாதமாக மீன்பிடி நிறுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த வாரம் தனியார் மூலம் மீன்பிடி தொடங்கியது. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பங்கு மீன்கள் நிறுத்தப்பட்டு, மீனவர்களுக்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு கூலி வழங்கப்பட்டது. இதனால் வைகை அணை மீன்பிடி முறையில் மீண்டும் பழைய நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி, மீன்பிடி தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை ஒருவாரமாக மீனவர்கள் மீன்பிடியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வைகை அணை நீர்த்தேக்கத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதற்கிடையே நேற்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், தாசில்தார் திருமுருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம், மீன்வளத்துறை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சாராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தனியார் மீன்பிடி ஒப்பந்ததாரர்களும் கலந்துகெர்ணடனர்.

அப்போது வைகை அணையில் இயற்கையான முறையில் வளரும் ஜிலேபி மீன் வகைகளுக்கு மட்டும் பங்கு அடிப்படையில் மீன்கள் பிரித்து கொடுக்கப்படும் என்றும், கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட வகையான மீன்களுக்கு 3-ல் ஒரு பங்கு மீன்கள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும் நாளை (புதன்கிழமை) முதல் வைகை அணையில் மீன்பிடி தொடங்கப்படும் என்றும் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்