மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலத்த சூறைக்காற்று
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை அறிகுறி உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
நேற்று சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பஸ் நிலையம், கோவில் உள்ள பல்வேறு பகுதிகளில் புழுதி பறந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து சென்ற மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
கடல் சீற்றம்
இதே போல் தனுஷ்கோடி பகுதியிலும் பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரையிலும் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதியும் அடைந்தனர்.