நடுக்கடலில் படகு மூழ்கியது; மீனவர் மாயம்
தொண்டி அருகே நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர் மாயமானார். 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
தொண்டி,
தொண்டி அருகே நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர் மாயமானார். 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
கடலில் மூழ்கியது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் சக்கரவர்த்தி(வயது 48), காளிதாஸ்(35), பாண்டி(48), சூர்யா(20), முருகேசன் (50) ஆகியோர் செல்வம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
சுமார் காலை 7 மணி அளவில் இவர்கள் சென்ற படகு, சுமார் 25 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகிற்குள் கடல்நீர் புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனே படகில் இருந்த நீரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் கடல்நீர் அதிகமாக புகுந்ததால் படகு சிறிது நேரத்தில் நடுக்கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்தனர். மேலும் அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.
இவர்களின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற நம்புதாளையை சேர்ந்த குமரேசன், மூர்த்தி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களை மீட்டனர்.
மீனவர் மாயம்
ஆனால் நம்புதாளையை சேர்ந்த மீனவர் முருகேசன் மட்டும் கடலில் மாயமானார். நீண்ட நேரம் அவரை கடலில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீனவர்கள் நம்புதாளை கிராமத்திற்கு தகவல் தெரிவித்தனர். நம்புதாளை ஊராட்சி தலைவர் பாண்டி செல்வி ஆறுமுகம், கவுன்சிலர் சுமதி முத்துராக்கு ஆகியோர் மீன் துறை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மீனவர் மாயமான சம்பவத்தால் நம்புதாளை மீனவ கிராமம் சோகத்தில் மூழ்கியது.
சிகிச்சை
நடுக்கடலில் மாயமான மீனவர் முருகேசனை மீட்டு தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நம்புதாளை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் மீட்கப்பட்ட மீனவர்கள் சக்கரவர்த்தி, காளிதாஸ், பாண்டி சூர்யா ஆகிய 4 பேரும் நாட்டுப்படகு மூலம் நம்புதாளை கடற்கரைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு தொண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.