ஒரே நாளில் 80 டன் மீன் விற்பனை

Update: 2022-06-19 16:19 GMT


திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் 80 டன் மீன் விற்பனையானது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீன்சந்தை

தொழில்நகரமான திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்களும், தொழிலாளர்களும் அசைவ உணவு சாப்பிட்டு, ஓய்வு எடுப்பது வழக்கம். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன் மற்றும் மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக தென்னம்பாளையம் மீன்சந்தையில் வாரந்தோறும் பொதுமக்கள் மீன் வாங்க குவிந்து விடுவார்கள். இந்த நிலையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடல்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீன்பிடி தடைகாலம் இருந்ததால் தென்னம்பாளையம் சந்தைக்கு மீன்வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து கடந்த 1½ மாதங்களாக பொதுமக்களிடம் மீன் வாங்கும் ஆர்வம் குறைந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக தென்னம்பாளையம் மீன்சந்தை வெறிச்சோடி காணப்பட்டதுடன், மீன் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் நீங்கியதை தொடர்ந்து நேற்று திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு மீன் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன்படி நேற்று மட்டும் 80 டன் மீன்கள் வந்தது. பல வாரங்களுக்கு பிறகு மீன்கள் அதிக அளவில் வந்ததால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வஞ்சிரம்

நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1100-க்கும், உளி ரூ.450-க்கும், பாற மீன் ரூ400-க்கும், விலா ரூ.400-க்கும், ஐல ரூ.250-க்கும், சங்கரா ரூ.400-க்கும், கட்லா ரூ.300-க்கும், மத்தி 150-க்கும், நண்டு ரூ.400-க்கும், இறால் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்