திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி
நவராத்திரி விழாவையொட்டி திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
திசையன்விளை:
நவராத்திரி விழா மற்றும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்கியுள்ளதால் ஏராளமானவர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். வேடம் அணியும் பக்தர்கள் குடும்பத்தார் மற்றும் பெரும்பாலான இந்துக்கள் குடும்பத்தினர் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவிற்கு மாறியுள்ளனர். இதன் எதிரொலியாக நேற்று திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை வழக்கத்தைவிட மிக குறைவாக விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக அசலை ரக மீன் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும். ஆனால் நேற்று 3 கிலோ அசலை மீன் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும் விளை மீன் ரூ.100-க்கும், ரூ.350-க்கு விற்பனை செய்யப்படும் நகரை ரக மீன் ரூ.200-க்கும், ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் மஞ்சள் பாறை மீன் ரூ.150-க்கும், ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் குதிப்பு ரக மீன் ரூ.250-க்கும், ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படும் மாவுலா மீன் ரூ.400-க்கும், ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படும் சீலா மீன் கிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து ரக மீன்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.