தற்காலிக மீன்மார்க்கெட் அமைக்கும் பணி
தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் தற்காலிக மீன்மார்க்கெட் அமைக்கும் பணி நடந்தது
தஞ்சாவூர்;
தஞ்சை கீழவாசல் ராவுத்தாபாளையத்தில் மீன்மார்க்கெட் செயல்பட்டு வந்தது. மீன்மார்க்கெட் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய மீன்மார்க்கெட் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி அந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.இதனால் கொண்டிராஜபாளையம் ரவுண்டானா அருகே அகழி கரையில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதுடன், இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது.அதுமட்டுமின்றி அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் சமீபத்தில் பெய்த மழையில் மார்க்கெட்டின் மேற்கூரை கீழே சாய்ந்தது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொண்டிராஜபாளையம் ரேஷன் கடை பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.இந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் சிமெண்டு தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் அந்த பணி கிடப்பில் போடப்பட்டன. அந்த இடத்தில் தான் தற்போது தற்காலிக மீன்மார்க்கெட் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.அங்கு வளர்ந்து இருந்த செடிகள் மற்றும் குப்பைகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இன்னும் சில நாட்களில் தற்காலிக மீன்மார்க்கெட் இந்த இடத்தில் செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.