முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி: கரூர் வீரர்கள் 75 பேர் தேர்வு
கரூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு 75 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
மாநில அளவிலான போட்டி
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள், வீராங்னைகளுக்கு டி-சர்ட் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு டீ-சர்ட் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தொடக்கம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி அடுத்த மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், கரூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் கையுந்துபந்து, கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 71 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
வெற்றி பெற வேண்டும்
மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கரூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.விளையாட்டு வீரர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் இந்த பயணத்தை மகிழ்ச்சியாகவும் சிறப்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.